Monday, February 21, 2011

நீண்ட நாள் வாழ 15 வழிகள்!!

நாள் வாழ் நிறைய வழிகள் உள்ளன. நம் வாழ்வை நாமே கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்!

என்ன செய்தால் நீணட நாள் வாழலாம்.

சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேம்!

1. நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணி நேரம் ஓடுகிறீர்களா? அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். இதயக் கோளாறுகள், புற்றுநோய், நரம்பு வியாதிகள் வருவதும் குறைகிறது.

2. நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் உண்ணுகிறீர்களா? உங்கள் கெட்ட கொழுப்பு குறையும், உடல் எடையையும் குறைக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பும் நன்றாக இருக்கும்.

3. உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா? உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்!

4. நவீன தொழில் நுட்பத்தில் ஆர்வமுடன் இருக்கிறீர்களா? பிளாக்கர், ட்விட்டர், ஃபேஸ்புக், ஸ்கைப் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கு கொள்ளுங்கள். குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருங்கள். இது உங்கள் மூளையைப் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.

5. உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா? 1400-2000 கலோரிக்குள் தினமும் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உங்கள் இதயம் உங்களை விட 15 வயது இளையவர்களைப்போல் வலுவுடன் இயங்கும்.

6. மீன்களையும், கொட்டைகளையும் சாப்பிடுங்கள்! இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு என்ற நல்ல கொழுப்பு இருப்பதால் இவை உடலுக்கு நல்லது! இவை ரத்த நாளங்கள் பழுதாவதைத் தடுக்கின்றன!

7. முழுதானிய உணவை உண்ணுங்கள்! இவற்றில் விட்டமின் ஈ, நார்ச்சத்து அதிகம்! முழு கோதுமை ரொட்டி, பஸ்தா, போன்றவை புற்றுநோயைக்கூடத்தடுக்கும்!!

8. 100-200 முறை சிரித்தால் அது பத்து நிமிடம் ஜாகிங் செய்ததற்கு சமம் !! உண்மைங்க! அது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக்குறைத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

9. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டாம்! அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது! இந்த வகைத் தூக்கம் உள்ளவர்களில் இறப்பு அதிகம்!

10. நீண்ட மண வாழ்க்கை ஆயுளைக் கூட்டும். ஆண் பெண் இரு பாலருக்குக் இது பொருந்தும்.

11. தாய் தந்தையருடன் நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளுக்கு கொடிய நோய்கள் - இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் வருவது குறைவாம்!

12. உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு ஏதாவது விளையாடுங்கள்! செஸ், சீட்டு, கேரம் என்று பிடித்த விளையாட்டை விளையாடுபவர்கள் உடல் நலமுடன் இருக்கிறார்களாம்!

13. பச்சைத் தேயிலை டீ, கருப்பு டீ ஆகியவற்றில் இதயநோய் தடுக்கும். ஆகையால் தினம் ஒருமுறை சாப்பிடுங்கள்! குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் இதனை அருந்தினால் 28% அதிகம் உயிர் வாழ்கிறார்கள்!

14. ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!

15. நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள்! வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்!

நிறைய நாம் படித்தவைதான். மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்வதால் அவற்றை நாம் பயன்படுத்தி நீண்ட நாள் வாழலாமே!!

நன்றி.

Thursday, February 17, 2011

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!!!!!




நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

Wednesday, February 2, 2011

ஓஷோவின் அன்பின் கதை

முன்னொரு நாள்
மிகப் பழமை வாய்ந்ததும் கம்பீரமானதும்
ஆன ஒரு மரம் இருந்தது.

அதன் கிளைகள்
வான்வரை விரிந்து பரவிக் கிடந்தன.

அது பூத்துக் குலுங்கும் தருணத்தில்
எல்லா வண்ணங்களிலும் சிரிதும் பெரிதுமான
எல்லாவித வண்ணத்துப் பூச்சிகளும்
அதைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும்.

அது மலர்ந்து கனிகளைத்
தாங்கிக் கொண்டிருக்கையில்
தொலைதூர பிரதேசங்களிலிருந்து
பறவைகள் வந்து அதில் பாடும்.

நீண்டு திறந்திருக்கும் கைகளைப் போன்ற
அதன் கிளைகள்
அதன் நிழலில் வந்து இளைப்பாறும்
அனைவரையும் ஆசிர்வதிக்கும்.


அதன் அடியில்
எப்பொழுதும் ஒரு சிறுவன்
வந்து விளையாடிக்கொண்டிருப்பான்.
அந்த மரம் அந்த சிறுவனிடம்
ஒரு நேசத்தை வளர்த்துக்கொண்டது.

பெரியவர் தான் பெரியவர்
என்ற நினைப்பைக் கொண்டிருக்காவிட்டால்
பெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே.

அந்த மரத்திற்கு
அது மிகவும் பெரிது என்பது தெரியாது.
அந்த விதமான அறிவை
மனிதன் மட்டுமே கொண்டிருக்கிறான்.

பெரியது எப்பொழுதும்
தனது ஆணவத்தையே முக்கியமாகக் கருதும்.
ஆனால் அன்பிற்கு
சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது.

நெருங்கிவரும் எவரையும்
தழுவிக் கொள்வது அன்பு.

இப்படியாக அந்த மரம்
எப்பொழுதும் தன்னருகில்
விளையாடுவதற்காக வரும்
அந்த சிறுவனிடம்
அன்பை வளர்த்துக்கொண்டது.

அதன் கிளைகளோ உயர்ந்திருப்பவை
ஆனால் அது அவைகளை
அவனுக்காக
வளைத்துத் தாழ்த்திக் கொடுத்தது.

அப்போதுதானே
அவன் அதனுடைய பூக்களையும்
பழங்களையும் பறிக்கமுடியும்.

அன்பு எப்போதும்
வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும்
ஆணவம் ஒருபோதும்
வளைந்து கொடுக்காது.

நீ ஆணவத்தை நெருங்கினால்
அதன் கிளைகள்
இன்னும் எட்டமுடியாமல்
மேல்நோக்கி நீளும்.
அது நீ அதை நெருங்க முடியாதபடி
விரைத்து நிற்கும்.

அந்த விளையாட்டுச் சிறுகுழந்தை வந்தான்
அந்த மரம் தனது கிளைகளைத் தாழ்த்திக் கொடுத்தது

அந்தச் சிறுகுழந்தை
சில பூக்களைப் பறித்துக்கொண்டதில்
அந்த மரத்துக்குப் பெருமகிழ்ச்சி.
அதன் முழு இருப்பும் சப்த நாடியும்
அன்பின் ஆனந்தத்தில் நிறைந்தது.

எப்பொழுதும்
எதையாவது கொடுக்க முடியும்போது
சந்தோஷப்படுவது அன்பு.

எப்பொழுதும்
எதையாவது பெற முடியும்போது
சந்தோஷப்படுவது ஆணவம்.


சில நேரங்களில் அந்தச் சிறுவன்
அந்த மரத்தின் மடியில் படுத்து உறங்கினான்
சில நேரங்களில் அவன்
அதனுடைய பழங்களைப் பறித்து உண்டான்.
இப்படியாக அவன் வளர்ந்து வந்தான்.

சிலநேரம் அவன்
அந்த மரத்தின் மலர்களால்
கிரீடம் செய்து அணிந்துகொண்டு
காட்டு ராஜாவைப்போல
நடித்துக் கொண்டிருப்பான்.

அன்பில் மலர்கள் நிறைந்திருக்கும்போது
ஒருவன் அரசனாகி விடுவான்.

ஆனால் ஆணவத்தின்
முட்கள் அங்கிருந்தால்
ஒருவன் துன்பமும் ஏழ்மையும்
உள்ளவனாகவே இருப்பான்

அந்தச் சிறுவன்
மலர்கிரீடம் அணிந்து
ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து
அந்த மரம் ஆனந்தத்தால் பூரித்தது.

அது அன்பில் தலையசைத்தது
அது தென்றலில் இசைபாடியது.

அந்தச் சிறுவன் மேலும் வளர்ந்தான்
அவன் அந்த மரத்தின் கிளைகளில்
ஊஞ்சலாடுவதற்காக
மரத்தின் மேல் ஏற ஆரம்பித்தான்.

அந்தச் சிறுவன்
அதனுடைய கிளைகளின் மேல அமர்ந்திருக்கையில்
அந்த மரம் மிக மிக சந்தோஷப்பட்டது.

யாருக்காவது
சுகத்தை அளிக்க முடியும்போது
சந்தோஷப்படுவது அன்பு.

கஷ்டத்தைக் கொடுக்கையில் மட்டுமே
சந்தோஷப்படுவது ஆணவம்.

கால ஓட்டத்தில்
அந்தச் சிறுவனுக்கு
மற்ற பொறுப்புகளின்
சுமை சேர்ந்தது.

குறிக்கோள்கள் வளர்ந்தன.
அவன் தேர்ச்சி பெற வேண்டிய
தேர்வுகள் இருந்தன
அவன் அரட்டை அடிக்க ஊர் சுற்ற
நண்பர்கள் சேர்ந்தனர்.

எனவே அவன்
அடிக்கடி அந்த மரத்திடம் வருவதில்லை.

ஆனால் அந்த மரம்
அவனுடைய வரவை எதிர்நோக்கி
ஆவலோடு காத்திருந்தது.

அது அதனுடைய
ஆன்மாவிலிருந்து அழைப்பு விடுத்தது.

வா....வா.
நான் உனக்காகக் காத்திருக்கிறேன்.

அன்பு
இரவும் பகலும் காத்திருக்கும்.

இப்படியாக
அந்த மரம் காத்திருந்தது.

அந்தச் சிறுவன் வராததால்
மரம் சோகத்தில் ஆழ்ந்தது.

பகிர்ந்துகொள்ள முடியாதபோது
அன்பு சோகத்தில் ஆழ்கிறது.

எதையும் கொடுக்க முடியாதபோது
அன்பு வருத்தப்படுகிறது.

பகிர்ந்து கொள்ள முடிவதற்காக
நன்றி சொல்வது அன்பு.
முழுமையாகத் தன்னைக்
கொடுக்க முடியும்பொழுது
அன்பு
ஆனந்தத்தின் உச்சத்தைத் தொடுகிறது.

அந்தச் சிறுவன் வளர வளர
அந்த மரத்தினிடம் அவன் வருவது
குறைந்துகொண்டே வந்தது.

பெரிதாக வளர்ந்துவிட்ட மனிதனுக்கு
குறிக்கோள்கள் அதிகரித்துவிட்ட மனிதனுக்கு
அன்புகொள்ள நேரம் கிடைப்பது
குறுகிக் கொண்டே வரும்

இப்பொழுது அந்தச் சிறுவன்
உலக விஷயங்களில்
தன் முழு கவனத்தையும் கொண்டுவிட்டான்.

ஒருநாள்
அவன் கடந்துசெல்லும்போது
அந்த மரம் அவனிடம் சொல்லியது.

நான் உனக்காகவே காத்திருக்கிறேன்
ஆனால் நீ வருவதில்லை.
நான் தினமும் உன்னை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்தச் சிறுவன் கேட்டான்
உன்னிடம் என்ன இருக்கிறது?

நான் ஏன் உன்னிடம் வர வேண்டும்?
உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?
நான் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
நான் எனும் ஆணவம்
எப்பொழுதும் காரியத்தில்
குறிகொண்டதாகவே இருக்கும்.
ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் மட்டுமே
ஆணவம் தேடி வரும்.

ஆனால் அன்பு பயன்கருதாதது.
அன்பிற்கு அன்புகொள்வதே
அதன் பயன் பரிசு.

ஆச்சரியப்பட்ட அந்த மரம் கேட்டது
நான் ஏதாவது கொடுத்தால் மட்டும்தான்
நீ வருவாயா?

எதையும் பிடித்து வைத்துக்கொள்வது
அன்பு அல்ல.
ஆணவம் சேர்த்துக்கொண்டே போகும்
ஆனால் அன்பு
எந்த நிபந்தனையும் விதிக்காமல்
அளித்துக்கொண்டே இருக்கும்.

எங்களுக்கு அந்த ஆணவநோய் இல்லை
எனவே நாங்கள் ஆனந்தமாய் இருக்கிறோம்.
என்றது அந்த மரம்.

எங்களிடம் மலர்கள் மலர்கின்றன
பல கனிகள் எங்களிடம் பழுக்கின்றன
நாங்கள் இதமளிக்கும் நிழலைத் தருகிறோம்.

நாங்கள் தென்றலில் ஆடுகிறோம்
பாடுகிறோம்.

வெள்ளையுள்ளம் கொண்ட பறவைகள்
எங்கள் கிளைகளில் தாவித் திரிகின்றன
எங்களிடம் பணம் எதுவும் இல்லாதபோதும்
அவை இனிய கானம் பாடுகின்றன.

பணத்துடன் நாங்கள்
தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால்
அந்தநாள் முதல் நாங்களும்
கோவிலுக்குப் போக வேண்டியதாகி விடும்

பலமிழந்த மனிதர்களாகிய உங்களைப் போலவே-
எப்படி அமைதியைப் பெறுவது
எப்படி அன்பைப் பெறுவது என்று கற்றுக்கொள்ள.

எனவே பணம் வேண்டாம்
எங்களுக்கு பணத்தின் தேவை எதுவும் இல்லை.

அந்தச் சிறுவன் சொன்னான்
பின் ஏன் நான்
உன்னிடம் வர வேண்டும்?
நான் எங்கு பணம் இருக்கிறதோ
அங்கு போகிறேன்.
எனக்குப் பணம்தான் வேண்டும்.

ஆணவம்
பணத்தைக் கேட்கிறது
ஏனெனில்
அதற்கு அதிகாரம் வேண்டும்.

அந்த மரம் சிறிது யோசித்துவிட்டுக்
கூறியது.

எனது அன்பே
வேறு எங்கும் நீ போக வேண்டாம்
எனது பழங்களைப் பறித்து
அவைகளை விற்பனை செய்.
அந்த வகையில்
உனக்குப் பணம் கிடைக்கும்.


அந்தச் சிறுவன்
உடனே பிரகாசமானான்.

அவன் அந்த மரத்தின் மீதேறி
அதன் எல்லாப் பழங்களையும் பறித்துக்கொண்டான்:
கனியாத பழங்களைக்கூட
உலுக்கி எடுத்துக் கொண்டான்.

அந்த மரம் மகிழ்ச்சியடைந்தது
அதன் சில கொம்புகளும் கிளைகளும்
முறிந்துவிட்ட போதிலும்
அதனுடைய பல இலைகள்
நிலத்தில் உதிர்ந்துவிட்ட போதிலும்.

தான் உடைந்தாலும் கூட
அது அன்பை சந்தோஷப்பட வைக்கிறது
ஆனால் முடிவதையெல்லாம்
எடுத்துக்கொண்ட பின்னும்
ஆணவம் சந்தோஷமடைவதில்லை.

ஆணவம் எப்பொழுதும்
இன்னும் அதிகத்திற்கே ஆசைப்படுகிறது.


அந்தச் சிறுவன்
ஒருமுறைகூடத் திரும்பிப்பார்த்து
அதற்கு நன்றி சொல்லவில்லை
ஆனால் அதையெல்லாம்
அந்த மரம் கவனிக்கவேயில்லை.

அது அதனுடைய
நன்றியுணர்வில் நிரம்பியிருந்தது-
தனது கனிகளைப் பறித்து
விற்றுக்கொள்ளச் சொன்னதை
அந்தச் சிறுவன் ஏற்றுக்கொண்டதிலேயே
அது நன்றியுணர்வு கொண்டது.

அதன்பின் அந்தச் சிறுவன்
நீண்டகாலத்திற்குத் திரும்பி வரவேயில்லை.

இப்போது அவனிடம்
பணம் இருந்தது
ஆகவே பரபரப்பாக இருந்தான்-
இருக்கும் பணத்திலிருந்து
இன்னும் பணம் பண்ணும் வேலை.

அந்த மரத்தை
அவன்
சுத்தமாக மறந்துவிட்டான்.

ஆண்டுகள் பல கழிந்தன.
அந்த மரம்
சோகத்தில் ஆழ்ந்தது.

அது அந்தச் சிறுவனின்
வருகைக்காக ஏங்கியது-
எப்படி மார்பில் பால் நிரம்பிய
நிலையிலுள்ள தாய்
தன் மகனைத் தவறவிட்டுவிட்டு
தவிப்பாளோ அதுபோல.

அவளுடைய முழு ஜீவனும்
தனது மகனுக்காக ஏங்கும்
அவள் பயித்தியம் போல
தனது மகனைத் தேடுவாள்-
எப்படியாவது அவன் வந்து
அவளை லேசாக்கிவிடமாட்டானா என்று.

அந்த மரத்தின்
உள் கதறல் அத்தகையதாயிற்று
அதன் முழு ஜீவனும்
வேதனையில் துடித்தது.

பல வருடங்களுக்குப் பிறகு
தற்போது வளர்ந்த ஓர் ஆளாக
அந்தச் சிறுவன் அந்த மரத்தினிடம் வந்தான்.

அந்த மரம் கூறியது
வா என் சிறுவனே வா
என்னைக் கட்டித்தழுவிக்கொள்.

அந்த மனிதன் சொன்னான்
அந்தப் பாசத்தையெல்லாம் நிறுத்திக்கொள்.
அவையெல்லாம் குழந்தைப் பருவ சங்கதிகள்.
நான் இன்னும் குழந்தையல்ல.

ஆணவத்தின் பார்வைக்கு
அன்பு பயித்தியக்காரத்தனம்
குழந்தைத்தனமான கற்பனை.

ஆனால்
அந்த மரம் அவனை அழைத்தது:

வா வந்து என் கிளைகளில் ஊஞ்சலாடு.
வா... ஆடு.
வா... என்னோடு விளையாட வா.

அந்த மனிதன் கூறினான்
இந்தப் பயனற்ற பேச்சையெல்லாம்
முதலில் நிறுத்து!
நான்
ஒரு வீடு கட்ட வேண்டும்.
நீ எனக்கு
ஒரு வீட்டைத் தர முடியுமா?

அந்த மரம் வியப்படைந்தது:
ஒரு வீடா!
நான் வீடில்லாமல் தானே இருக்கிறேன்.

மனிதன் மட்டும்தான் வீடுகளில் வாழ்கிறான்.
மனிதனைத் தவிர வேறு எவரும்
வீடுகளில் வாழ்வதில்லை.

அப்படி நான்கு சுவர்களுக்குள்
அடைபட்டுக் கொண்டுவிட்ட
அவனுடைய நிலையை கவனித்தாயா?

அவனது கட்டிடங்கள்
எவ்வளவு பெரியதாகியதோ அந்தஅளவு
மனிதன் சிறிதாகிப் போனான்.

நாங்கள் வீடுகள் கட்டி வாழ்வதில்லை
ஆனாலும் நீ எனது கிளைகளை
தாராளமாய் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்
பின் அவைகளைக் கொண்டு
ஒரு வீடு கட்டிக்கொள். என்றது.

கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்
அந்த மனிதன்
ஒரு கோடாலியைக் கொண்டு வந்தான்
அந்த மரத்தின் எல்லாக் கிளைகளையும்
வெட்டிக் கொண்டான்.

இப்போது அந்த மரம்
வெறும் ஒற்றை மரத்தண்டாய் ஆகிப்போனது.

ஆனால் அன்பு
இவை போன்றவைகளைப் பற்றி
கவலைப் படுவதில்லை  -
அன்பு கொண்டவருக்காக
அதன் அங்கங்கள் துண்டிக்கப்பட்டாலும்.

அன்பு என்றால் கொடுப்பது:
அன்பு எப்பொழுதும் கொடுக்கத் தயாராயிருக்கிறது.

அந்த மரத்திற்கு நன்றி சொல்லவேண்டும்
என்றுகூட அவன் நினைக்கவில்லை.
அவன் அவனுடைய வீட்டைக் கட்டிக்கொண்டான்.

நாட்கள் வருடங்களாக உருண்டோடியது.
அந்தக் கிளைகளையிழந்த மரத்தண்டு
காத்திருந்தது.... காத்திருந்தது.

அது அவனுக்கு அழைப்புவிட நினைத்தது
ஆனால் அதற்கு பலமூட்டும்
அதன் கிளைகளோ இலைகளோ
இப்போது அதனிடம் இல்லை.

காற்றடித்தது
ஆனால் அந்தக் காற்றிடம்
ஒரு செய்தியைக் கொடுத்தனுப்பக் கூட
அதனால் இப்போது முடியவில்லை.

இருந்தபோதிலும் அதனுடைய ஆன்மாவில்
ஒரே ஒரு பிரார்த்தனையே
ஒலித்துக் கொண்டிருந்தது:

வா வா என் அன்பே வா.
ஆனால் எதுவுமே நிகழவில்லை.
காலம் ஓடியது
அந்த மனிதனுக்கு இப்போது வயதாகிவிட்டது.

ஒருமுறை அதைக் கடந்து போகும்போது
அவன் வந்தான்
வந்து அந்த மரத்தினடியில் நின்றான்.

அந்த மரம் உடனே கேட்டது
உனக்காக நான் செய்யக்கூடியது
இன்னும் ஏதாவது இருக்கிறதா?

நீ மிக மிக நீண்டகாலம்
கழித்து வந்திருக்கிறாய்.

அந்த வயதான மனிதன் சொன்னான்
நீ எனக்கு வேறு என்ன செய்ய முடியும்?

நான் இப்போது
தூர தேசங்களுக்குப் போக வேண்டும் -
அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக
அதற்குப் பயணப்பட
எனக்கு ஒரு படகு வேண்டும்.

உற்சாகத் துள்ளலோடு
அந்த மரம் கூறியது
எனது அன்பே
அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை
எனது மரத்தண்டை வெட்டிக்கொள்
அதிலிருந்து ஒரு படகு செய்துகொள்.

ஆனால்
தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள் -
நான் உனது வரவிற்காக
எப்பொழுதும் காத்துக் கொண்டிருப்பேன்.

அந்த மனிதன்
ஒரு ரம்பத்தை எடுத்து வந்தான்
மரத்தண்டை வெட்டிச் சாய்த்தான்
அதிலிருந்து ஒரு படகு செய்தான்
கடல்பயணம் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.

இப்போது அந்த மரம்
ஒரு வெறும் அடிக்கட்டை.

அது காத்திருந்தது -
அதன் அன்பானவனின் வருகைக்காக.
அது காத்திருந்தது
மேலும் அது காத்திருந்தது
மேலும் அது காத்திருந்தது.

அந்த மனிதன் ஒருபோதும் திரும்பவில்லை:
ஆணவம்
எங்கே ஏதாவது கிடைக்குமோ
அங்கு மட்டுமே போகும்.

ஆனால் அந்த மரத்திடமோ எதுவுமேயில்லை
கொடுப்பதற்கு
சுத்தமாக எதுவுமில்லை.

அடைவதற்கு எதுவுமில்லாத இடம்நோக்கி
ஆணவம் ஒருபோதும் போகாது

ஆணவம்
என்றுமே பிச்சைக்காரன்தான்
அது எப்போதும்
யாசித்துக்கொண்டேதான் இருக்கும்.
ஆனால் அன்பு ஒரு அறக்கட்டளை.

அன்பு ஒர் அரசன்
ஒரு பேரரசன்!

அன்பை விட உயர்ந்த
ஒரு அரசன் எங்காவதுண்டா?

ஒருநாள் இரவு
அந்த அடிக்கட்டையின் அருகில்
நான் ஓய்வுகொண்டேன்.

அது என்னிடம் குசுகுசுத்தது
என்னுடைய அந்த நண்பன்
இன்னும் திரும்பி வரவில்லையே.

அவன் ஒருவேளை முழுகிப் போயிருப்பானோ
அவன் ஒருவேளை தொலைந்து போயிருப்பானோ
என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

அந்தத் தொலைதூர தேசங்கள்
ஏதாவதொன்றில்
அவன் காணாமல் போயிருக்கலாமல்லவா.

அவன் இப்போது
உயிரோடுகூட இல்லையோ என்னவோ.

அவனைப் பற்றிய ஏதாவது செய்திக்காக
எவ்வளவு நான் ஏங்குகிறேன் தெரியுமா?

எனது வாழ்வின்
கடைசிகாலத்தை நெருங்கிவிட்ட
இந்த சமயத்தில்
அவனைப் பற்றித் தகவல் ஏதாவது கிடைத்தால்கூட
நான் திருப்திப் பட்டுக் கொள்வேன்.

அதன் பிறகு நான்
சந்தோஷமாக இறந்து விடுவேன்.

ஆனால் என்னால் அவனை
அழைக்க முடிந்தாலும்கூட
அவன் வர விரும்ப மாட்டான்.

என்னிடம் கொடுப்பதற்கு
இனி எதுவும் இல்லை
ஆனால் அவனுக்கோ
எடுத்துக்கொள்ளும் மொழி மட்டும்தான் புரியும்.

ஆணவத்திற்கு எடுத்துக்கொள்ளும்
மொழி மட்டுமே புரியும்.
ஆனால் கொடுக்கும் மொழியே அன்பு.

நான்
இதற்கு மேல் சொல்ல
எதுவுமில்லை.

மேலும்
இதற்கு மேல் சொல்ல
எதுவும் பாக்கியும் இல்லை.

வாழ்க்கை
அந்த மரத்தைப்போல
ஆகமுடிந்தால்
தனது கிளைகளை
பரந்து விரிந்து பரவச்செய்தால்
அதனால்
எல்லோரும் அதன் நிழலில்
பாதுகாப்புப் பெற முடிந்தால்

அப்போது
அன்பு என்றால் என்ன
என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

எந்த
வேதப் புத்தகமும் கிடையாது.

எந்த
வழிகாட்டலும் இல்லை.

எந்த
அகராதியும் கிடையாது
அன்புக்கு.

எந்த
குறிப்பிட்ட கொள்கைகளும் கிடையாது
அன்புக்கு.

அன்பைப் பற்றி
நான் எப்படிப் பேச முடியும்
என்று
நான் ஆச்சரியமே படுகிறேன்!

விளக்குவதற்கு அவ்வளவு கஷ்டமானது
அன்பு.

ஆனால்
அன்பு
இதோ இருக்கிறது!

("காமத்திலிருந்து கடவுளுக்கு" புத்தகத்திலிருந்து..,)